Thursday, 21 April 2011

தண்ணீரில் கைத்தொலைபேசி விழுந்தால்

நாம் அடிக்கடி செய்திடும் ஒரு காரியம் நம் கைத்தொலைபேசியை தண்ணீரில் போடுவது. குளியலறைகளுக்கும் எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.
அவ்வாறு விழுந்த பின் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்:
1.முதலாவதாக போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். கைத்தொலைபேசி கவர், பற்றரி கவர், பற்றரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.
2. அடுத்து கைத்தொலைபேசியில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து நீரை உறிஞ்சி எடுக்கவும். முழுவதுமாக உலர செய்திடவும்.
3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால் அதனை எடுத்து கைத்தொலைபேசியை மீதாகப் பயன்படுத்தி ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக பற்றரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும்.
இவ்வாறு உலர வைக்கையில் ஹேர் ட்ரையரை கைத்தொலைபேசிக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது கைத்தொலைபேசியின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலர வைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.
இந்த வேலையை மேற்கொள்கையில் கைத்தொலைபேசியை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும்.
இதே போல பற்றரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.
நன்றாக உலர்ந்த பின்னர் காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர் பற்றரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில் இன்னும் சில மணி நேரம் காத்திருந்து ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும்.
அதன் பின்னரும் இயங்கவில்லை எனில் கைத்தொலைபேசியை சரி செய்திடும் பணியாளரிடம் சென்று நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.

அல்சர் வியாதியிலிருந்து விடுபட

உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் "கேஸ்டிரைடிஸ்" என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.
அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவலைப்படும் போதோ அல்லது பொறாமைப்படும் போதோ கூட மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது.
மேலும் அல்சர் உருவாக சில கிருமிகளும் காரணமாக உள்ளன என்கிறது மருத்துவ உலகம். அது ஆன்ட்ரல் கேஸ்டிரைடிஸ். வழக்கமாக வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது வலி குறையும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடும் போது மீண்டும் வலி ஏற்படுகிறது. அல்சர் கிருமியை ஒழிப்பதற்கான மாத்திரை தான் அல்சர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கும்.
தலைவலி உள்ளிட்ட உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி கடைகளில் வாங்கி சாப்பிடும் தவறான மருந்துகளின் காரணமாகவும் அல்சர் வர வாய்ப்புள்ளது. அப்படி அல்சர் வந்த பின்னர் அது பல தொந்தரவுகளை உண்டாக்குகிறது. மேல் மற்றும் நடுவயிறு, மார்பெலும்பின் பின்புறம் எரிவது போன்ற வலியினை ஏற்படுத்தும். பசியின் போது வலிக்கும். குமட்டல் போன்ற அறிகுறியையும் ஏற்படுத்தும்.
இதனால் வயிறு உப்பியது போலத் தோன்றி ஏப்பத்தை உருவாக்கும். வயிறு காலியாக இருக்கும் போது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அல்சர் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். இது போன்ற தொல்லைகள் சாப்பிட்ட பின்னர் மறைந்து மறுபடியும் உங்களைத் தொல்லை செய்யும். எப்படித் தடுக்கலாம்?
தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். சாப்பாட்டில் காரம் குறைக்கவும். அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ளலாம். வலி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும்.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறைந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.
இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாட்டி வைத்தியம் அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.
அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.
ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

அழிந்து போன கோப்புகளை மீண்டும் பெறுவதற்கு

நாம் சில வேளைகளில் தவறுதலாக சில கோப்புகளை அழித்து விட்டு திரும்பப் பெற முடியாமல் தவிப்பதுண்டு.
வெறும் DELETE மட்டும் அழுத்தி இருந்தால் எளிதாக மறுபயன்பாட்டு பெட்டியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் SHIFT+DELETE அழுத்தி இருந்தால் மீண்டும் பெறுவது கடினம்.
இதற்கு பல்வேறு மென்பொருள்கள் பல காலமாக கிடைக்கப் பெறுகிறது. அவற்றுள் மிக எளிமையான ஒன்று தான் இந்த "Undelete Plus".
இதன் மென்பொருளின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதனை உங்கள் கணணியில் நிறுவ வேண்டியது இல்லை. எடுத்து செல்லத்தக்க(Portable) வகையில் இம்மென்பொருள் அமைந்துள்ளது.
1. மென்பொருளை திறந்ததும் C:/ தெரிவு செய்யப்பட்டிருக்கும் அதை நீக்கி உங்களுக்கு தேவையான டிரைவை குறிக்கவும். பின் Start Scanஐ சொடுக்க உங்கள் பணி தொடங்கப்பெறும்.
2. உங்கள் அழிந்து போன கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அனைத்து வகை கோப்புகளும் தனித் தனியே காண்பிக்கப்படும். தேவையான கோப்புகளை தெரிவு செய்து Start Undelete கொடுங்கள்.
3. இவ்வழியில் உங்கள் கோப்பை கண்டுபிடிப்பது கடினம் எனில் பின்வருமாறு தக்க மாற்றங்களுடன் முயற்சித்து பார்க்கலாம்.
4. டாகுமென்ட் கோப்புகளை மட்டும் தேட விரும்பினால் *.docx என முதல் பேட்டியில் நிரப்பி தேடலாம். அல்லது draftcopy என்று அதன் பெயர் இருக்குமேயானால் அதனை உள்ளிட்டும் தேடலாம்.
5. மாற்றி அமைக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட திகதியை கொண்டும் தேடலாம். குறைந்தபட்ச கோப்பு அளவு நிர்ணயித்து தேடும் வசதியும் காணப் பெறுகிறது.(Ex. 100KB).

அனைத்து வகையான கோப்புகளின் போர்மட்டுகளை மாற்றம் செய்வதற்கு

இன்று இணையத்தில் பல்வேறு தளங்களில் இலவசமாகவே எண்ணற்ற பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் பல்வேறு வகையான காணொளிகள் தரவிறக்க கிடைக்கின்றன.
ஆனால் அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்கும் போர்மட்டில் கிடைப்பதில்லை. அவ்வாறு போர்மட்டை மாற்றுவதற்காக ஏதேனும் இலவச மென்பொருள் கிடைக்குமா என்று இணையத்தில் அலைந்து தரவிறக்கினால் அது நாம் எதிர்பார்க்கும் வசதிகளுடன் இல்லாமல் இருக்கலாம். இதற்காக ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. அது தான் Format factory 2.60 என்ற மென்பொருளாகும்.
1. இது ஒரு இலவச மென்பொருளாகும். இதை இணையத்தில் தரவிறக்கி நிறுவும் போது உங்களிடம் ask.comன் கருவிப்பட்டையை நிறுவ கேள்வி கேட்கப்படும். தேவையென்றால் நிறுவிக் கொள்ளலாம். இல்லையென்றால் குறியீட்டை நீக்கி விட்டு மென்பொருளை நிறுவிக் கொள்ளலாம்.
2. இந்த ஒரே மென்பொருளில் எந்த வீடியோவையும் MP4, AVI, 3GP, RMVB, GIF, WMV, MKV, MPG, VOB, MOV, FLV, SWF போர்மட்களாகவும், எந்த ஓடியோவையும் MP3, WMA, FLAC, AAC, MMF, AMR, M4A, M4R, OGG, MP2, WAV, WavPack போர்மட்களாகவும், புகைப்படங்களை JPG, PNG, ICO, BMP, GIF, TIF, PCX, TGA போர்மட்களாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
3. DVD Ripping எனப்படும் DVD to CD வசதி, Music CD யிலிருந்து Audio File ஆக மாற்றும் வசதி, DVD/ CD யை ISO/ CSO ஆக மாற்றும் வசதி, மேலும் ISO <-> CSO வசதியும் உள்ளது.
4. மேலும் இதில் உள்ள Advanced Option மூலமாக Video joiner, Audio Joiner மற்றும் Mux எனப்படும் ஒளியையும், ஒலியையும் ஒன்றிணைக்க உதவும் வசதிகள் மற்றும் Media File Info வசதிகளும் உள்ளது.
5. இதன் மூலம் RMVB, H264, DIVX, XVID, WMV2 ஆகிய Encodingகளை துல்லியமாகவும் அதிவிரைவாகவும் Encoding செய்யலாம்.
6. இதில் Convert செய்யப் போகும் வீடியோவின் உள்ளார்ந்த இயல்புகளையும் நமக்குத் தேவையானபடி மாற்றிக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் எண்ணற்ற கோப்புகளை Convert செய்யலாம். Converting முடிந்ததும் கணணியை Auto Shutdown செய்யும் வசதியும் உள்ளது.
7. இத்தனை வசதிகளுடன் இந்த மென்பொருள் வருவதால் C Net கூற்றின்படி இதன் வகையில் உள்ள இலவச Format Coverting மென்பொருட்களில் தற்பொழுது இதுவே முதல் இடத்தில் உள்ளது.

இதயம் காக்கும் பழங்கள்

இன்றைய நவீன உலகில் மக்களை இரு விதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.
அவை நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம். இந்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்கு அளித்த கொடை தான் காய்களும், கனிகளும்.
சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது. இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.
ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.
தேங்காய் நீர் இதயத்திற்கு ஊக்கம் அளிக்கும். நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மார்பில் வலியும், மரத்துப் போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம். இது வலியைக் குறைக்கும். இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது. அது நோயைக் குணப்படுத்த உதவும்.
ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம் மற்றும் மார்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து ஆகும். இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது. அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவைகளுக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு.

"நினைத்தாலே போதும்" யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளனர்.
இம்முறை மூலம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களை மனதில் நினைத்தால் போதும். அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்.
இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது: மனதில் நினைப்பதை புரிந்து கொண்டு செயலாற்றும் கணணிகள் ஏற்கனவே உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை செல்போனிலும் பயன்படுத்தியுள்ளோம்.
மூளையில் ஏற்படும் அதிர்வுகளை இ.இ.ஜி கருவி மூலமாக பதிவு செய்து அதற்கேற்ப இது செயல்படுகிறது. இதற்காக புளூடூத் கருவியுடன் இணைந்த பட்டை ஒன்றை தலையில் அணிந்து கொள்ள வேண்டும்.
"யாருக்கு போன் செய்ய வேண்டும்" என்று மூளையில் ஏற்படும் நினைப்பு, அதிர்வு இ.இ.ஜி கருவி மூலம் பதிவு செய்யப்பட்டு இத்தகவல் புளூடூத்துக்கு அனுப்பப்படுகிறது. நினைத்த எண்ணுக்கு அழைப்பு போகும்.
நோக்கியா என்73 என்ற மாடல் செல்போனை வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு 70 முதல் 85 சதவீதம் வரை வெற்றி கிடைத்திருக்கிறது. பிரத்யேக பயிற்சி எடுத்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் நினைத்தவுடன் போன் செய்ய முடியும்.
நம்பர் அழுத்த முடியாத வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை கருத்தில் கொண்டு இதை கண்டுபிடித்துள்ளோம். இவ்வாறு ஜங் கூறினார்.

அயல் கிரகங்களில் கண்டறியப்பட்ட கறுப்பு நிற தாவரங்கள்

அயல் கிரகங்களில் உயிர்வாழக் கூடிய சூழ்நிலைகள் உள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட சூரியன்களை கொண்டுள்ள அயல் கிரகங்களில் வளரும் தாவரங்கள் கறுப்பு நிறத்தில் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நமது பூமியில் இரு நட்சத்திரங்கள் அருகாமையில் இருப்பது போன்றோ அல்லது இரு நட்சத்திரங்கள் பிரிந்து தொலைதூரத்தில் இருப்பது போன்ற அமைப்பை கொண்ட ஒத்த கிரகங்களின் கணணி வெளிப்பாடுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வினை ஜாக் ஓ மாலே ஜேம்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இவர் கூறுகையில்,"நட்சத்திரத்தின் வெப்பநிலையைப் பொறுத்தே செடியின் நிறம் அமைகிறது. அயல் கிரகங்களில் காணப்படும் ஒளியின் நிறத்தை தாவரங்கள் ஒளிச் சேர்க்கை நிகழ்வுக்கு பயன்படுத்தும் போது அதன் நிறங்கள் மாறுபடுகின்றன" என்றார்.
சிறிய சூரியனில் இருந்து வெளிச்சம் பெறும் அயல் கிரகங்களின் தாவரங்களில் இலை நிறம் மங்கி இருக்கும். நமது கண்களுக்கு அந்த இலை கறுப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நமது பூமியால் சூரிய ஒளியை போதிய அளவில் பெறுவதால் ஒளிச்சேர்க்கை நடத்தும் தாவரங்கள் பச்சை நிறத்தில் உள்ளன.

ஒளிப்படக் காட்சிகளை கணணி திரையிலிருந்து தொலைக்காட்சி திரைக்கு மாற்ற

இணைய வழியாக வீடியோக்கள், திரைப்படங்கள் கிடைப்பதனால் பலரும் இது போல தேவைகளை உணர்ந்து அதற்கான வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறிய மொனிட்டரில் தோன்றும் திரைக் காட்சிகளை பெரிய திரையில் பார்த்து மகிழ்வது சிறப்பாகத் தான் இருக்கும். ஆனால் சி.ஆர்.டி மற்றும் எல்.சி.டி தொலைக்காட்சிகளை, கணணியுடன் இணைப்பது எப்படி என்பது தான் இங்கு எழும் அடிப்படைக் கேள்வி.
கணணியுடன் எல்.சி.டி தொலைக்காட்சிகளை மட்டுமே இணைக்க முடியும் எனப் பலரும் எண்ணுகின்றனர். இது தவறு. சி.ஆர்.டி தொலைக்காட்சிகளையும் இணைக்கலாம். அதற்கான வசதி அந்த தொலைக்காட்சியில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அண்மைக் காலத்தில் வரும் சில நிறுவன தொலைக்காட்சிகள் இந்த வசதியைப் பெற்றுள்ளன.
1.எச்.டி.எம்.ஐ(HDMI): புதிதாய் வரும் சி.ஆர்.டி தொலைக்காட்சிகளில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக அதற்கான சரியான கேபிள்களை வாங்கி தொலைக்காட்சியுடன் இணைக்கலாம். கணணியிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். தொலைக்காட்சி ரிமோட் அல்லது தொலைக்காட்சியில் HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
2. டி.வி.ஐ(DVI): இதற்கான அடுத்த சிறப்பான வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும் போதும் நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக கணணியில் காணப்படும். டி.வி.ஐ கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். தொலைக்காட்சியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால் DVI to HDMI மாற்றக் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
3.வி.ஜி.ஏ(VGA): இப்போது வரும் சி.ஆர்.டி தொலைக்காட்சிகளிலும், மற்றும் அனைத்து வகைக் கணணியிலும் பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல வி.ஜி.ஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும்.
ஒரு முனையை கணணியிலும், இன்னொன்றை தொலைக்காட்சியிலும் இணைத்துப் பார்க்கலாம். தொலைக்காட்சி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.
4. எஸ்.வீடியோ(Svideo): இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது.
பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி தொலைக்காட்சி மற்றும் கணணிகளில் கிடைக்கும். கணணியில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும்.
பின்னர் இதற்கான சரியான சேனலை தொலைக்காட்சியில் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு சின்ன விடயத்தை மனதில் கொள்ள வேண்டும்.
DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில் படங்கள் மட்டுமே தொலைக்காட்சியில் கிடைக்கும். ஒலி உங்கள் கணணி ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள் இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும். ஆனால் HDMI கேபிள் இணைப்பில் இந்த குறை இல்லை.
தொலைக்காட்சியில் ஒலி வேண்டும் என்றால் தனியே 3.5 மி.மீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும்.
எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன. இவ்வாறு இணைத்த பின்னர் சில மடிக்கணணிகளில் கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக அனைத்து மடிக்கணணிகளிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும்.

கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது.
காய்கறிகளை முடிந்த வரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால் தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது.
காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடை வெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டி விடும். வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள "குவர்சடின்" என்று வேதிப்பொருள் அதற்கு உதவுகிறது.
இப்போது தர்பூசணி பழங்கள் நிறைய கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீ­ர் தான். தர்பூசணி போன்று வெள்ளரிக்காயிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. அதனால் இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள்.
காய்கறிகளைக் கொண்டு சூப் தயார் செய்து அதை குளிர வைத்து உட்கொள்வதும் சிறந்தது என்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடைகாலத்தில் நல்ல உடல்நலத்தை தக்கவைக்கும்.
வெயிலின் தாக்கம் தாங்காமல் நாம் குளிராக எது கிடைத்தாலும் குடிப்போம், சாப்பிடுவோம். நம்முடைய பலவீனத்தைத் தெரிந்து கொண்டு தான் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.
இந்த குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரி தான் சேருமே தவிர வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. ஆரோக்கியம் கருதி இவற்றை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பது இன்னொரு ஆரோக்கிய ரகசியம்.
வெயில் நேரத்தில் வெளியே செல்ல நேரிட்டால் சுத்தமான குடிநீரை கையோடு கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால் இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள். மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லது தான். அதே நேரம் அவற்றில் சேர்க்கப்படும் தண்­ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்த வரை அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வது தான் சிறந்தது.
தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வரண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும். தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு முகத்தை கழுவவும்.
வெயிலின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான உங்கள் வறண்ட சருமம் பொலிவு பெறும். தினமும் காலை, மாலை இருவேளை குளியுங்கள். காலைக் குளியலின் போது மட்டும் தலை மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து நன்றாக ஊறவிட்டு அதன்பின் குளிப்பது நல்லது. இப்படிச் செய்வதால் உடல்சூடு குறையும்.
மாலையில் எண்ணைக் குளியல் ஆகவே ஆகாது. கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்து விடும். அதைப் போக்க இரவில் தூங்கும் முன் கண்களை சுற்றி விளக்கெண்ணெயை தடவி விடுங்கள். கண்கள் குளிர்ச்சி பெறும்.

குழந்தைகளின் அறிவை வளர்க்க கூடிய ஓன்லைன் விளையாட்டுகள்

குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாகவும், அவர்களின் அறிவை வளர்க்கும் விதமாகவும் ஒரு தளம் உள்ளது.
படம் வரைவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும். விளையாட்டு விளையாடுவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும்.
புதிதாக அறிவியல் ரீதியில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சில குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும். இப்படி அனைத்து தரப்பு குழந்தைகளும் ஒரே இடத்தில் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நாம் Coloring Page என்பதில் தொடங்கி Games, Printables, Crafts, Videos எனப் பல பகுதிகளை கொண்டுள்ளது. Coloring Page என்பதை சொடுக்கி படத்திற்கு வண்ணம் தீட்டலாம்.
Games என்பதை சொடுக்கி எளிமையான குழந்தைகளின் அறிவை வளர்க்கக்கூடிய விளையாட்டை விளையாடலாம். Printables என்பதை சொடுக்கி விரும்பிய படங்களை பிரிண்ட் செய்யலாம்.
Crafts என்பதை சொடுக்கி பலதரப்பட்ட கலைகளையும் எளிய தொழில்நுட்ப விபரங்களையும், அறிவியல் ரீதியான பல அறிய தகவல்களையும், பொம்மைகள் பேப்பரில் உருவாக்கக்கூடிய அழகான டிசைன்கள் என அனைத்தும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து இருக்கும் Videos என்பதை சொடுக்கி குழந்தைகள் அதிகமாக விரும்பும் அனிமேசன் வீடியோக்களை பார்க்கலாம்.

பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல்

பார்வை இழப்பை தடுக்க இனி ஒரே ஒரு ஊசி போதும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபற்றி லண்டனில் கண் சிகிச்சை நிபுணரும், விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றவருமான ஆலிவர் பேக்ஹவுஸ் கூறியதாவது: ஒரே ஒரு ஊசி மூலம் பார்வையிழப்பை தடுக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம்.
அந்த ஊசி மூலம் ஸ்டீராய்டை கண்களுக்கு பின்னால் இடம்பெறச் செய்யலாம். பார்வையிழப்பை ஏற்படுத்தக்கூடிய கண் நரம்புகள் அடைப்பை அது தடுக்கும். அதனால் திடீர் பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
மேலும் விழித்திரை அருகே எரிச்சலுக்கு எதிரான மருந்தை அந்த ஊசி வெளியிடும். எனவே கண் எரிச்சலால் ஏற்படும் பார்வைக் குறைவு தடுக்கப்படும். இந்த ஊசியை எதிர்கால பார்வையிழப்பைத் தடுக்கவும் பயன்படுத்தலாம். ஏற்கனவே பார்வைக் குறைபாடு ஏற்பட்டவர்களும் பார்வையை மீட்க பயன்படுத்த முடியும்.
இது தவிர பலவிதமான கண் நோய்களை குணப்படுத்தவும் இந்த ஊசி உதவும். நீரிழிவு நோய் மற்றும் வயது காரணமாக ஏற்படும் பார்வைக் குறைபாடுகளையும் தவிர்க்க முடியும். இந்த சிகிச்சைக்கு ரூ.1.44 லட்சம் செலவாகும் என ஆலிவர் தெரிவித்தார்.
பிராட்போர்டில் உள்ள யாக்ஷயர் கண் மருத்துவமனையின் சிகிச்சை நிபுணர் ஷபீக் ரகுமான் கூறுகையில்,"இந்த ஆராய்ச்சி முடிவு பிரமிக்க வைக்கிறது. பல்வேறு பார்வைக் கோளாறுகளை தவிர்க்க இந்த ஊசி சிகிச்சையை பயன்படுத்தலாம். அதன் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கின்றன" என்றார்.

சீடியில் உள்ள கோப்புகளை கொப்பி செய்யாதீர்கள்

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணணியில் உள்ள டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம்.
நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்து விட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை கொப்பி செய்து அதனை நம் கணணியில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது.
ஒவ்வொரு கோப்பையும் நாம் வீடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான கோப்புகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில கோப்புகள் ஒழுங்காக கொப்பி ஆகியிருக்காது.
எனவே நாம் டிவிடிக்களை கொப்பி செய்வதற்கு பதிலாக அதனை டிவிடி இமேஜ்(DVD IMAGE)ஆக உருவாக்கி கொள்ளலாம். இமேஜ் என்பது சீடி/டிவிடிகளின் நகல் ஆகும். இவை பொதுவாக iso, nrg போன்ற போர்மட்டுகளில் இருக்கும்.
படங்களை மட்டும் இன்றி game ,data, os போன்ற டிவிடிக்களை கொப்பி செய்யாமல் இமேஜ் ஆக கொப்பி செய்வதே சிறந்தது. ஓ.எஸ் போன்றவை பூட்டபுள் சீடி/டிவிடியாக இருக்கும். அதனை சாதரணமாக கொப்பி செய்து மற்றொரு சீடி/டிவிடியில் பதிவு செய்தால்(burn) அவை பூட்டாகாது.
எனவே நீங்கள் எந்த ஒரு சீடி/டிவிடியை கொப்பி செய்வதாக இருந்தால் அதனை இமேஜ் ஆக கொப்பி செய்யுங்கள். அதனை நாம் சீடி/டிவிடியில் எரிக்க வேண்டும் என்றால் ஒரே கிளிக்கிள் எந்த ஒரு தகவல் இழப்பும் இல்லாமல் எரிக்க முடியும். இது போன்ற தகவல்களை சீடி/டிவிடி இமேஜ்களாக தயாரிக்க பல மென்பொருட்கள் உள்ளன.
நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் nero போன்ற மென்பொருட்களை கொண்டு நாம் சீடி/டிவிடிகளிலிருந்து இமேஜ்களை உருவாக்கலாம். ஆனால் நாம் பார்க்கப்போவது ஒரு இலவசமான எளிய மென்பொருள்.
இதனை கொண்டு சீடி/டிவிடி இமேஜ்களை உருவாக்கிக் கொள்ளலாம். அதனை பிறகு சீடி/டிவிடிகளில் எரித்துக் கொள்ளலாம் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இதன் பெயர் image burn ஆகும்.
உங்கள் டிவிடியை டிரைவில் போட்டு விட்டு Create image file from disc என்பதை கிளிக் செய்யுங்கள். பிறகு எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுங்கள். அவ்வளவு தான் விரைவாக உங்கள் டிவிடியின் நகல் உருவாகி விடும்.

தாவர எண்ணெய் மூலம் ஓடும் மிக நீளப் பேருந்து

பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது.
பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம்.
இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பேருந்துகளை இந்நிறுவனம் இயக்க உள்ளது.
மேலும் மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பேருந்துகள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

நம் நண்பர்களின் புகைப்படங்களை அழகுப்படுத்த

பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் நமக்கு இருக்கும் நண்பர்களின் முகப்பு புகைப்படங்களை இணைத்து அழகான சித்திர வேலைப்பாடு அமைந்தது போல் அழகான புகைப்படமாக உருவாக்கலாம்.
இன்றைய சுழலில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் நாம் பயன்படுத்தும் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் மைபேஸ் போன்ற சமூக தளங்களில் நமக்கு இருக்கும் நண்பர்களின் முகப்பு புகைப்படங்களை கொண்டு ஒரு அழகான வேலைப்பாடு மிக்க சித்திரமாக உருவாக்கலாம்.
இத்தளத்திற்கு சென்று நாம் எந்த சமூக வலைத்தளங்களில் நமக்கு நண்பர்கள் அதிகம் இருக்கிறார்களோ அதை தேர்ந்தெடுத்து Login செய்தால் மட்டும் போதும். அடுத்து வரும் திரையில் நம் அனைத்து நண்பர்களின் புகைப்படமும் சேர்ந்து நம் புகைப்படம் Background ஆக உள்ளபடி அழகான சித்திர வேலைப்பாடுடன் கூடிய படமாக நமக்கு தெரியும்.
இந்த படத்தை சொடுக்கி நம் கணணியில் சேமித்து வைக்கலாம். நம் வலைப்பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இதை பிரிண்ட் செய்து வாங்க விருப்பம் உள்ளவர்களும் 14 டொலர் பணம் செலுத்தி Poster ஆகவும் வாங்கலாம்.

இரத்த அழுத்ததிற்கு மருந்தாகும் வெங்காயம்

இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.
இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவுஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்தது.
இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.
இது தவிர கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.

உலகின் மிகப்பெரிய சிலந்தியின் கற்படிவம் கண்டுபிடிப்பு


உலகின் மிகப்பெரிய சிலந்தியின் கற்படிவம் குறித்த தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
சீன சிலந்தி குறித்து ஆய்வாளர்கள் விவரிக்கையில் மின்னும் தங்க நிறமான உறுதி மிக்க வலைப் பின்னல்களை உருவாக்கக் கூடியதாக பெரும் சிலந்தி வகைகள் உள்ளன. ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ள பெண் சிலந்தி கற்படிவம் 16 கோடியே 50 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினமாகும்.
இந்த சிலந்திக்கு "நெபிலியா ஜீராசிகா" என்பது விலங்கியல் பெயராகும். இதைப்பற்றி உயிரியல் இதழில் ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர்.
அமெரிக்காவின் கனாஸ் பல்கலைகழகத்தை சார்ந்த பேராசிரியர் பால்செல்டன் கூறுகையில்,"உலகின் பெரும் பெண் சிலந்தியான நெபிலியா ஜீராசிகா உருவத்தில் பெரியது அல்ல. ஆனால் அதன் கால்கள் மிக நீளமானதாக இருக்கும். அந்தக் கால்கள் 15 செ.மீ வரை நீண்டு இருக்கும்" என்றார்.
தற்போதைய கால கட்டத்தில் நெபிலியா சிலந்தி இனங்கள் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் உள்ளன. மங்கோலியாவுக்கு உள்பகுதியில் ராட்சத சிலந்தி கற்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விசேட உருவம் பொருந்திய பெரும் சிலந்தி இனம் எப்படி அழிந்தது என்று இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வுத் தகவல்

தேவைக்காக கொலைகூடச் செய்யத் தயங்காத மனிதன் சோதனையை தாங்க முடியாத காலத்தில் தானே சாவைத் தேடி தற்கொலையும் செய்து கொள்கிறான்.
இந்த தற்கொலை செய்யும் செயல் மனிதனோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல என்கிறது புதிய ஆய்வு ஒன்று. தாவரங்களும் தற்கொலை செய்து கொள்வது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா நாட்டின் உயிர் வேதியியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் இதைக் கண்டுபிடித்து உள்ளனர். தாவரங்கள் தங்களின் ஆபத்தான காலங்களில் விரும்பியே தற்கொலை செய்து கொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதாவது விலங்குகள், பூச்சிகளால் தாக்கப்பட்டாலோ அல்லது நோயால் பாதிக்கப்பட்டாலோ தற்கொலை நடவடிக்கையாக அந்த பாகங்களுக்கான வளர்ச்சியை நிறுத்தி வைத்து விடுகிறது.
வியன்னா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுகுறித்து தெரிவித்ததாவது: இதுவரை இதுபோன்ற செயல்களுக்கு வெப்பமே கரணம் என்று தவறாக எண்ணப்பட்டு வந்தது. ஆனால் தாவரங்கள் தங்கள் உடலின் ஒரு பாகத்தை செயல் இழக்கச் செய்துவிட்டாலும் அதன் மையப்பகுதி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த தற்கொலை நிகழ்வு அதன் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இடம் பெயர்ந்து சொல்ல முடியாத காரணத்தால் உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பாதுகாப்பு திட்டமே ஆகும். இந்த தற்கொலை சுபாவம் இலையுதிர் காலத்தில் தனது இலைகளை உதிர்த்து விட்டு சாதகமான சூழலுக்கு காத்திருக்கும் அந்த மாற்றத்தைப் போன்றது தான்.
அதே வேளையில் தாவரங்கள் மற்றொரு பாதுகாப்பு யுத்தியாக திடீர் ரசாயனங்களை சுரந்தும் பூச்சி இனங்களுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்துகின்றன. இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கணணியின் வேகத்தை அதிகரிக்க

கணணியை தொடர்ந்து உபயோகிப்பதால் அதன் வேகம் குறைந்து விடும். மேலும் இணையத்தில் உலா வருகையில் எண்ணற்ற கோப்புகளை கணணியில் சேமிப்போம்.
அவ்வாறு செய்கையில் Melware, Spyware போன்ற வைரஸ்கள் தோன்ற வாய்ப்பு அதிகம் உள்ளது. பின்வரும் வழிமுறைகளை கடைபிடித்தால் உங்கள் கணணியின் வேகம் எப்போதும் போலவே சிறப்பாகவே இருக்கும்.
Clean Your Windows Registry: விண்டோஸ் Registryகளை சுத்தம் செய்ய வேண்டும்.
Removing Unneeded Files: தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட வேண்டும்.
Removing Unneeded Programs: தேவையில்லாத ப்ரோக்ராம்ஸ் களை அழித்துவிட வேண்டும்.
Empty the Recyle Bin:  மறுபயன்பாட்டு பெட்டியில் உள்ள கோப்புகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
Perform a Disk Defragmentation: உங்கள் கணணியில் உள்ள காலியிடங்களை ஒருங்கிணைக்கும் பணியை இது செய்கிறது. மாதம் இரு முறை இப்பணியை செய்ய வேண்டும்.
Update Your Anti Virus: உங்களுடைய Anti virus Softwareவை இணையத்தில் இணைத்து புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளை செய்து வந்தால் உங்கள் கணணியின் வேகம் அதிகரிக்கும்.

அனைத்து வகையான சட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் இணையம்

உலக அளவில் எவையெல்லாம் சட்டப்படி குற்றம் அதற்கான தண்டனை உள்ளிட்ட அனைத்து வகையான சட்டப் பிரச்சனைகளுக்கும் உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது.
வெளிநாட்டில் எதெல்லாம் குற்றம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும் நம் அனைவருக்கும் ஒவ்வொரு குற்றத்தைப் பற்றிய அனைத்து விபரங்களையும், இதற்கு உண்டான தண்டனை என்பதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் நமக்கு கூற ஒரு தளம் இருக்கிறது.
இத்தளத்திற்கு சென்று சட்டத்தைப் பற்றி ஒரு விரிவான தகவல்களை ஒரு அகராதியில் படிப்பது போல் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொன்றிற்கும் விரிவான விளக்கங்களை அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் தேடும் குற்றத்திற்கான பதிலை பிரபலமான வக்கீல்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். கண்டிப்பாக சட்டத்துறையில் இருப்பவர்களுக்கும், சட்டம் படிக்க விரும்புபவர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.

தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம்

தினமும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு இதய நோய் வர மிக அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரது வீட்டிலும் தவறாமல் இடம் பெறும் சாதனம் தொலைக்காட்சி தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசி, வி‌ளையாடுவதை விட தொலைக்காட்சி முன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
ஓர் இடத்தில் அமராமல் ஓடி ஆடும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சிரமப்படும் தாய்மார்களோ, குழந்தைகயை ஓர் இடத்தில் அமர வைக்க தொலைக்காட்சியில் ஏதாவது கார்டூன் சேனலை போட்டு விட்டு உணவு கொடுக்கின்றனர்.
இதன் விளைவு இன்றைய இளம் தலைமுறையினர் விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை தொலைக்காட்சி பார்ப்பதையே பிரதான பொழுது போக்காக கொண்டுள்ளனர். இவ்வாறு அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த ஆய்வில் இறங்கியது சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு.
3-6 வயதிலான சுமார் 1500 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல அதிர்ச்சி தரும் ‌தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள், 40 நிமிடங்கள் வரை ஓடி, ஆடி விளையாடும் செயல்களில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் கண்களின் பின்புறம் உள்ள நரம்புகளை சுருக்கி விடுவதுடன் இதயம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்புக்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளையும் சுருக்குகிறது.
இதனால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகளுக்கான சீரான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதுவே நாளடைவில் இதய நோய், ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்த மிக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கிறது.
அதேசமயம் நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்து விட்டு அதிக நேரம் விளையாடும் குழந்தைகளின் ரத்த ஓட்டம், இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி பார்த்த குழந்தைகளின் ரத்த ஓட்டத்தை விட சிறப்பாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள்: ஆய்வுத் தகவல்

ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீளமாக இருக்கிறதா? இப்படி நீளமான மோதிர விரல் உள்ள ஆண்கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர்களாக உள்ளனர்.
மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியானவர்கள். அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வேண்டும் என பெண்கள் கூறுகிறார்கள்.
இந்த புதிய ஆய்வினை ஜெனிவா பல்கலைகழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஆள்காட்டி விரலுக்கும், மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹோர்மோனுடன் தொடர்புடையதாக உள்ளது.
ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களை பார்க்கும் போது, பெண்களுக்கு ஹோர்மோன் அதிக அளவில் தூண்டப்படுகிறது. இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு கூடுதல் அழகாக தெரிகிறார்கள்.
இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் பெண்களை அது வெகுவாக கவர்கிறது என ஆய்வுத் தலைவர் டொக்டர் காமிலே பெர்டன்சி தெரிவித்தார்.

2900 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற மூளை ஓபரேஷன்

திபெத்தில் 1998ம் ஆண்டு ஒரு வித்தியாசமான மண்டை ஓடு கிடைத்துள்ளதாகவும், அதை சோதனை செய்ததில் அந்த மண்டை ஓட்டை பிளந்து ஓபரேஷன் செய்ததற்கான அடையாளங்கள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.
மண்டை ஓட்டை பிளந்து ஓபரேஷன் செய்வது என்பது சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாக கருதப்படுகிறது.
ஆனால் அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த போது அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்தது. அதாவது அந்த காலத்திலேயே ஓபரேஷன் நடந்துள்ளது.
இப்போது திபெத்தில் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை ஓபரேஷன் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. பழங்கால புத்தகம் ஒன்றை ஆய்வு செய்த போது இந்த தகவல் கிடைத்து உள்ளது.
திபெத்தில் உள்ள லசா பல்கலைக்கழக பேராசிரியர் கர்மா டிரின்லி இந்த தகவலை கண்டறிந்து உள்ளார். அப்போது மூளை ஓபரேஷன் நடந்ததை இந்தியாவில் இருந்து தசோக்யெல் என்ற டொக்டர் பார்வையிட வந்திருந்ததாகவும் அதில் குறிப்புகள் உள்ளன.

உங்கள் பேஸ்புக் நண்பர்களின் விவரங்களை ஒரே இடத்தில் அறிய

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றிருக்கும் ஒரு சமூக இணையதளமாகும்.
இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விடயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம்.
உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வருகிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் பட்டியலில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும்.
இது நடக்கிற காரியம் இல்லை. ஆகவே இதுபோன்ற விவரங்களை ஒரே இடத்தில் அறிய ஒரு சூப்பர் வழி உள்ளது. இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் மேலதிகமான தகவல்களை ஒரே இடத்தில் அறியலாம்.
இந்த தளத்தின் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் பட்டியல், உங்கள் நண்பர்கள் போஸ்ட் செய்த தகவல்கள் படத்துடன், உங்கள் பேஸ்புக் பட்டியலில் உள்ள அனைத்து நண்பர்களின் பிறந்த நாள் திகதிகள் ஒவ்வொரு மாதமாக, உங்கள் பேஸ்புக் நண்பர்களின் இடம் கூகுள் மேப் மூலமாக அறியலாம்.
மேலும் உங்கள் பேஸ்புக் நண்பர்களில் அதிக அல்பம் வைத்துள்ளவர்களின் முதல் பத்து நபர்கள், உங்களின் பேஸ்புக் நண்பர்களில் ஆண்கள் எவ்வளவு பெண்கள் எவ்வளவு என்ற பட்டியல்(சதவீத கணக்கில்), பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களின் activity இது போன்ற இன்னும் சில தகவல்களை தருகிறது இந்த இணையம்.
இதனை செயல்படுத்துவதற்கு முதலில் இந்த லிங்கில் Facebook Spectrumகிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Login பட்டனை அழுத்தவும்.
அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Allow என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்து உங்கள் விவரங்கள் லோடிங் ஆகும். அதுவரை காத்திருக்கவும் சரியாக லோட் ஆகவில்லை என்றால் refresh செய்யவும்.
சரியாக லோட் ஆகி முடிந்தவுடன் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அந்த விண்டோ வந்தவுடன், ஒவ்வொரு லிங்காக கிளிக் செய்து அந்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Friends: இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள அனைத்து நண்பர்களின் பட்டியல் வரும்.
Timeline: இந்த லிங்கை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பகிர்ந்த தகவல்கள் மற்றும் எப்பொழுது அதை பகிர்ந்தார்கள் என்ற விவரங்கள் வரும். இதில் ஒவ்வொரு நண்பர்களாக தேர்வு செய்து அந்த விவரங்களை காண வேண்டும்.
Birthday: இதை கிளிக் செய்தால் நம் நண்பர்களின் பிறந்த நாள் திகதிகள் மாதவாரியாக வரும்.
Location: இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் இருப்பிடம் பற்றிய விவரங்கள் வரும்.
அடுத்து Albums, Other, Mutuals, Activity, Search, More போன்ற லிங்குகளையும் அழுத்தி அதில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

சூரிய சக்தியில் இயங்கக்கூடிய "சோலார் விமானம்"

முழுக்க முழுக்க சூரிய ஒளியிலேயே இயங்கும் விமானம் சுவிட்சர்லாந்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள், விளக்குகள், ஹீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சோலார் விமானம் உருவாக்குவதற்கான ஆராய்ச்சி கடந்த 2003ம் ஆண்டில் இருந்தே நடந்து வருகிறது.
சுவிட்சர்லாந்தின் லாசான் நகரை சேர்ந்த இகோல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் முழுக்க முழுக்க சோலார் சக்தியிலேயே இயங்கும் விமானத்தை உருவாக்கியுள்ளது. அதிக அளவு கனம் இருக்கக் கூடாது என்பதால் கார்பன் பைபர் பொருளால் விமானம் உருவாக்கப்பட்டது.
ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய விமானத்தின் மொத்த எடை 1,600 கிலோ. ஒரு காரை விட கொஞ்சம் தான் அதிகம். சூரிய ஒளியில் இருந்து மின்சார சக்தி தயாரிப்பதற்காக 11,600 சோலார் செல்கள் பயன்படுத்தப்பட்டன.
சூரிய ஒளியின் மூலம் லித்தியம் பற்றரிகள் சார்ஜ் ஏற்றப்பட்டு அதன் மூலம் இன்ஜின் இயக்கப்பட்டது. 10 ஹார்ஸ்பவர் திறனுள்ள 4 இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. சுவிட்சர்லாந்தின் லாசான் நகருக்கு அருகில் உள்ள பேயர்ன் ராணுவ தளத்தில் இதன் சோதனை நேற்று முன்தினம் நடந்தது.
64 கி.மீ வேகத்தில் புறப்பட்ட விமானம் சராசரியாக 70 கி.மீ வேகத்தில் பறந்தது. சீராக பறந்த விமானம் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கியது. இதுபற்றி இகோல் தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானிகள் கூறுகையில்,"பற்றரிகளின் திறன், சோலார் விமானத்தின் திறனை அதிகரிக்க தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. உலகையே சுற்றி வரும் சோலார் விமானம் 2014ல் அறிமுகப்படுத்தப்படும்" என்றனர்.

விண்ணிலிருந்து பூமியை நோக்கி எரிகற்கள்: இன்று வெறும் கண்களால் பார்க்க முடியும்

வானியல் ஆர்வலர்கள் இன்று இரவு எரிகற்களை பார்த்து மகிழும் வாய்ப்பைப் பெறலாம்.
இம்மாதம் 21 ம் திகதி மற்றும் 22 ம் தேதி விண்ணிலிருந்து பூமியை நோக்கி ஈட்டியைப் போல பாயும் என்று வானியல் ஆராய்ச்சியாளர் மிலா மித்ரா தெரிவித்துள்ளார்.
மணிக்கு இரண்டு கற்கள் வீதம் புவியில் விழுந்த வண்ணம் இருக்கும். இந்த விண் கற்கள் மிகுந்த ஒளியுடனும் புழுதியைக் கிளப்பியபடி விண்ணிலிருந்து கீழே பாயும். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆனால் சில விநாடிகளில் இது மறைந்துவிடும்.
இவை இம்மாதம் 26 ம் திகதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒளி வெள்ளம் இல்லாத பகுதியிலிருந்து பார்க்க முடியும். மாலையிலேயே எரிகற்கள் விழுவது ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

50 வயது பெண்ணின் திருட்டு தந்திரம்

இறுதிச்சடங்கு வீடுகளில் உறவினர்கள் இறந்து போன நபருக்கான கிரியைகளை மேற்கொள்ளும் போது அங்கு ஊடுருவி பொருட்களை திருடும் 50 வயது பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
இந்தப் பெண் வடமேற்கு ஜேர்மனி நகரமான முன்ஸ்டரைச் சேர்ந்தவர் ஆவார். குறிப்பிட்ட நபரின் மரண அறிவித்தல் செய்தி நாளிதழ்களில் வெளியாவதைக் கவனித்து அந்த பெண் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து பொருட்களை திருடியதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்த நவீன திருட்டுக்களை இந்தப் பெண் மேற்கொண்டு இருப்பது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஜான் ஷா பேக்கர் கூறுகையில்,"மரண அறிவித்தல் செய்தியைத் தரும் நபர்கள் இறந்தவருடைய முழு முகவரியை தருவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.
இறுதிச்சடங்கு நடைபெறும் வீடுகளில் நம்பிக்கையான ஒருவர் வீட்டை கண்காணிக்க வேண்டும். குடும்பத்தினர் இறந்தவரின் இறுதிச்சடங்கு நடத்த வெளியேச் செல்லும் போது பூட்டப்பட்ட வீட்டில் அதிக அளவு பணம், நகைகளை பார்வையில் படும்படி வைக்கக்கூடாது. 
மிகப் பத்திரமாக பூட்டி வைக்க வேண்டும் அல்லது பாதுகாப்பான வெளியிடத்தில் வைக்க வேண்டும் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.

பர்தா அணியாத முஸ்லிம் பெண்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்

பிரிட்டனில் பர்தா அணியாத முஸ்லிம் பெண்கள் கொல்லப்படுவார்கள் என்று ஒரு இனம் தெரியாத முஸ்லிம் தீவிரவாதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும்போக்கு கொள்கையுடைய இந்த முஸ்லிம்கள் கிழக்கு லண்டனில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆசியாவைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத ஒரு பெண் மருந்தாளர் தான் பர்தா அணியுமாறு அச்சுறுத்தப்பட்டதாக முறையிட்டுள்ளார். தொடர்ந்து இப்படி நடந்து கொண்டால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று ஒருவர் தன்னை எச்சரித்ததாகவும் அவர் முறையிட்டுள்ளார்.
இந்த முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அச்சுறுத்தியமை நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்படவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி பேர்மிங்ஹம் தொகுதியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித் மஹ்மூத் கருத்து வெளியிடுகையில்,"இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைக் கண்டித்துள்ளார். அதோடு இவர்கள் மற்றவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீங்கள் பர்தா அணிய வேண்டியது உங்கள் கடமை என்பதை சகோதர உணர்வோடு யாரும் யாருக்கும் ஞாபகமூட்டலாம். ஆனால் அதற்காக உங்களைக் கொல்லுவோம் என்று அச்சுறுத்துவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று பிரிட்டனில் உள்ள பிரபல முஸ்லிம் மதகுரு ஒருவரும் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக அரசாங்கமே இல்லாத நாடு: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது

உலகில் நீண்ட காலமாக அரசாங்கம் என்ற ஒன்றே இல்லாத நாடு என்ற பெருமை பெல்ஜியத்துக்குக் கிடைத்துள்ளது. இது கின்னஸ் புத்தகத்திலும் பதிவாகியுள்ளது.
பெல்ஜியத்தின் பிளமிஷ் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக கடந்த வசந்த காலத்தின் போது அரசாங்கம் கவிழ்ந்தது.
கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் நடத்தப்பட்ட தேர்தல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. பெல்ஜியத்தின் வடபகுதியைச் சேர்ந்த டச் மொழி பேசும் செல்வந்தர்கள் பெல்ஜியத்தில் பிரிவினை கோரும் பிளமிஷ் பிரிவை ஆதரித்தனர்.
அதனையடுத்து ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டதால் இன்னமும் உத்தியோகப் பூர்வமாக அரசொன்று அங்கு நிறுவப்படவில்லை. இதற்கு முன் ஈராக்கில் தான் இவ்வாறாதோர் நிலை காணப்பட்டது. அது 289 தினங்கள் நீடித்தது. ஆனால் பெல்ஜியம் தற்போது அதைத் தாண்டிவிட்டது.
அடுத்ததாக கம்போடியாவில் இவ்வாறான நிலை இதற்கு முன் 353 தினங்கள் நீடித்தது. பெல்ஜியம் அதையும் தாண்டி சாதனைப் படைக்குமா? என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.