Tuesday, 26 April 2011

அதிக அளவு இசைப் பாடல்களை கேட்டால் மன அழுத்தம் ஏற்படும்: ஆய்வுத் தகவல்

புத்தகங்கள் படிப்பதைக் காட்டிலும், எம்.பி3யில் இசை கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 
இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம், வடக்கு கரோலினா பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர்.
106 இளைஞர்கள் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 46 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒவ்வொரு வார இறுதியிலும் இவர்கள் அழைக்கப்பட்டு எவ்வாறு பொழுது போக்கினர் என்று கேள்வி கேட்கப்பட்டது.
இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வில் எப்போதாவது எம்.பி3யில் இசை கேட்பவர்களைக் காட்டிலும் அதிகளவில் இசை கேட்பவர்களின் மன நிலை எட்டு மடங்கு அதிகமாக மன அழுத்தத்தில் உள்ளது.
இதே போல் எப்போதாவது புத்தகம் படிப்பவர்களுடன் அதிகளவில் புத்தகம் படிப்பவர்களை ஒப்பிடுகையில் 10ல் ஒருவருக்கு மன அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட முக்கிய விஞ்ஞானி பிரையன் பிரிமாக் கூறுகையில்,"மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இதில் இருந்து தப்பிக்க இசை கேட்கின்றனரா அல்லது அதிகளவில் இசை கேட்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறதா அல்லது இரண்டும் சேர்ந்தே இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment